Monday 2 June 2014

ராஜாவின் தென்றல் !

இசைஞானி இளையராஜா பற்றிய ஆயிரக்கணக்கான கட்டுரைகள் வெளியாகும் அவரது 71 ஆவது பிறந்த நாளான இன்று, அவரின் பாடல்களால் ஈர்க்கப்பட்டு , ஆளப்பட்டுக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்குள் ஒருவனாகவும் அவரது இசையினால் ஈர்க்கப்பட்டு இசைக் கலைஞனான லட்சக்கணக்கானவர்களில்  ஒருவனாகவும் , என் போன்ற இன்னும் சில ராஜா ரசிகர்களும் சேர்ந்து அவரது பாடல்களை வைத்து ஒரு படைப்பை  உருவாக்கினோம்...


நம்மை வாழவைக்கும் இயற்கைக்கும் இசைக்கும் ஒன்றுசேர நாம் வழங்கும் மரியாதை இது... இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளிவந்த இயற்கையைப் பாடும் மூன்று பாடல்கள் ஒரு கோர்வையாக (medley) ஸ்ரீவத்சலா ராமநாதனின் குரலிலும் எனது பின்னணி இசையிலும்..... அருள்செல்வத்தின் ஒளிப்பதிவோடும்,கே.எஸ்.கண்ணனின் படத்தொகுப்போடும் !

நாங்கள் இதற்காக சில மாதங்களுக்கு முன்னர் திட்டமிட்டு  ஒலிப்பதிவும் நிறைவடைந்த பின்னர் , இந்த வருடத்துக்கான இளையராஜா அவர்களின் பிறந்த நாளன்று 71,001 மரக்கன்றுகள் நடப்பட்ட வேண்டும் என்றும் இவ்வருடம் அவரின் பிறந்தநாளன்று பசுமைப் புரட்சியொன்று உருவாக வேண்டும் என்றும் அவரது உத்தியோகபூர்வ பக்கத்தில்  செய்தி வெளியிடப்பட்டது . இந்த அறிவிப்பும் நாங்கள் இயற்கை பற்றிய அவரது பாடல்களை தொகுத்து செய்த இந்தப் படைப்பும் சுவாரஸ்யமான தற்செயல் நிகழ்வு..

இந்த உருவாக்கத்துக்கான முதல் படி பாடகி ஸ்ரீவத்சலாவினுடயது. ஸ்ரீவத்சலா ராமநாதன் இலங்கை இசைத்துறைக்கு புத்தம் புதியவர். இலங்கையின் சக்தி தொலைக்காட்சி நடத்திய "சக்தி சுப்பர் ஸ்டார்- சீசன் 5" தொடரின் வெற்றியாளர்.. இசை ஆசிரியையான தாயாரின் வழிகாட்டலில் கர்நாடக சங்கீதம் பயின்றவர் . வயலின் மற்றும் வீணை இசைக்கத் தெரிந்தவர். ஒரு முழுமையான பாடகி.

இசைஞானியின் தீவிர ரசிகையான இவருக்கு தனது முதல் படைப்பு ராஜாவின் பாடல்களை தன் குரலில் பாடி வெளிவரும் ஒரு படைப்பாக இருக்க வேண்டுமென்பது நீண்ட நாள் கனவு. இத்தனை ஆயிரம் பாடல்களுக்குள் மூன்று பாடல்களை தெரிவு செய்வதில் பல நாட்கள் கடந்தன. இறுதியில் பாடல்கள் இவை தான் என முடிவாகி ஒலிப்பதிவும் பண்ணியாயிற்று.

ஸ்ரீவத்சலாவின் சொந்த ஊரான பண்டாரவளையில் இப்பாடல் காட்சிப்படுத்தப் பட்டது. பாடல் வரிகள் சொல்லும் இயற்கை அழகினை கண்முன்னே காட்சிப்படுத்த அருள்செல்வதின் ஒளிப்பதிவு பேருதவி புரிந்தது. அருள்செல்வம் சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்றவர் நல்ல குறும்படங்கள் தந்தவர். அவர் ஒரு மாறுதலுக்காக ஒளிப்பதிவாளராகக் கடமையாற்றினார்.

படத்தொகுப்பு கே.எஸ்.கண்ணன். வர்ணம் தொலைக்காட்சியின்  சிரேஷ்ட படத்தொகுப்பாளர் . பல விளம்பரப்படங்கள் குறும்படங்களுக்கு படத்தொகுப்பாளராகக் கடமையாற்றியவர்.

பண்டாரவளையில் படப்பிடிப்புக்கு எங்களுக்கு ஆரம்பமுதல் இறுதி வரை பக்கபலமாக நின்ற திரு.சச்சிதானந்தன் அவர்களும் திருமதி. கிறிஸ்டினா அருள் செல்வம் அவர்களும் நன்றியுடன் நினவுகூறப்பட வேண்டியவர்கள்.

பாடல்கள் என்னவெனச் சொன்னால் சுவாரசியம் கெட்டுவிடும்... ஆனால் மூன்று பாடல்களும் மூன்று ஸ்ருதியில் பாடப்பட்டவை.. ஸ்ருதி மாற்றங்கள் கேட்பவர்கள் உணரா வண்ணம் நிகழ வேண்டும் என்ற எண்ணத்தில் இடை இசைகளின் இசைக்கோர்வைகள் உருவாக்கப்பட்டன....

எல்லாப் புகழும் இசைஞானி இளையராஜவுக்கே! இந்த மனிதன் திரை இசை என்ற கூண்டுக்குள் இருந்து வெளி வந்து உலக இசையின் சொத்தாக மாறி பிரம்மாண்டமான இசைக்கோர்வைகளை உருவாக்கி  மொழிகடந்து உலகளாவிய ரசிகர்கள் மனதில் நீங்கா  இடம் பெற வேண்டும்..... அவரை, அவரின் இசையாய் ஆழமாய் ரசிக்கும் ஆராயும் எல்லாருக்குமே இந்த ஆசை உண்டு... எங்கள் இசை ஆசானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..... !

3 comments:

Unknown said...

மிக நன்றி இளையராஜா அவர்களுக்கு .அவரை கொண்டாட வார்த்தைகள் தேவையே இல்லை.அவரது இசையால் வாழும் பல கோடி உயிர்களில் எனதும் ஒன்று.

தனிமரம் said...

அழகான அருமையான பாடல்களுடன் வாழ்த்திய சிந்தனை அருமை ராஜாவுக்கு என் வாழ்த்துக்களும்

ஜீவன் சுப்பு said...

Great Effort ...

Post a Comment